உத்தமதானபுரம் கைலாசநாதர் கோவில்
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1250ஆம் நாள் பதிவு
மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்கும் மூன்று விநாயகர்கள்
வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் நிறை பணி வழிபாடு
தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையே அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமதானபுரம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று, அச்சிட்டுப் பதிப்பித்த, தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்ட உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊர் இது.
இக்கோவிலில் சிவன் மூலவராக இருந்தாலும், இங்கே முக்கியமானவரும், விசேஷமானவரும். வரப்பிரசாதியாகவும் விளங்குபவர் விநாயகர் தான். இக்கோவிலில் மூன்று விநாயகர்கள் ஒரே வரிசையில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான். அம்சமாக விளங்குவதால் இவர்களுக்கு மும்மூர்த்தி விநாயகர்கள் என்று பெயர். பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று இந்த மூன்று விநாயகர்களுக்கு செய்யும் நிறை பணி வழிபாடு என்பது இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். உத்தியோகம் கிடைக்க, திருமணம் கைகூட, விவசாயம் சிறக்க, தொழில் வளர்ச்சி அடைய போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மனதில் வைத்து அபிஷேகங்கள் செய்து ஒரு தேங்காய் அளவுக்கு 108 கொழுக்கட்டைகள் செய்து, படைத்து வேண்டிக் கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றி அருளுகிறார்கள் இந்த மும்மூர்த்தி விநாயகர்கள். வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் இந்த வழிபாட்டிற்கு, 'நிறை பணி வழிபாடு' என்று பெயர்.