சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்
முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மன்
கேரள மாநிலம், எர்ணாகுளம் என்ற இடத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் இருக்கிறது புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, 'அம்பே நாராயணா..தேவி நாராயணா..லஷ்மி நாராயாணா..பத்ரி நாராயணா' என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் துர்க்கா தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
இந்த ஆலயத்தில் அம்பாள் ‘பந்தீரடி’ எனப்படும் காலை பூஜையின் போது மிகுந்த சக்தியுடன் திகழ்கிறாள். இந்தப் பூஜை முடிந்தே, பகவதி அம்மன் மூகாம்பிகையாகக் கொல்லூர் செல்வதாக ஐதீகம். அதனாலேயே மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம். இந்த காலை பூஜையின் போதே கெட்ட ஆவிகள் பிடித்தவர்கள், மனநோய் பிடித்தவர்கள் அன்னையின் அருளால் குணமடைகிறார்கள். இந்த ஆலயத்தில் நெய் பாயாசம் நைவேத்தியம் பெருமை பெற்றது.
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.