திருமீயச்சூர் மேகநாதர் கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை லலிதாம்பிகையிடம் சமர்ப்பிக்கும் துர்க்கையம்மனின் கிளி
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையின் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து, மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள தேவார தலம் திருமீயச்சூர் மேகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் லலிதாம்பிகை.
இந்த தலத்தில், மேகநாதர் சந்நிதி கோஷ்டத்தில், அஷ்ட புஜங்களுடன் 'சுகப்பிரம்ம துர்காதேவி' எழுந்தருளியுள்ளாள். முழுவதும் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள துர்க்கை, மகிஷனின் தலைமீது நின்றபடி முன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் அபயஹஸ்தம் காட்டி, சங்கு, சக்கரம், பட்டாக்கத்தி, சூலம், கேடயம் ஆகிய ஆயுதங்களுடன் ஒரு கிளியையும் ஏந்தியபடி புன்னகை வதனத்துடன் சாந்தவடிவமாக அருள்புரிகிறாள். துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது அதிசயமாக உள்ளது. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள்.
அன்னை லலிதாம்பிகையிடம் நாம் வைக்கும் கோரிக்கையை துர்க்கையம்மனிடம் மனமுறுக வேண்டினால், துர்க்கையம்மன் கையில் உள்ள கிளி தூது சென்று, லலிதாம்பிகையிடம் வரம் பெற்று வரும் என்பதும் ஐதீகம். அம்பிகையும், கிளி சொல்வதைக் கேட்டு, பக்தர்களின் குறைகளை தீர்த்துவைப்பாளாம். அதுவும், பக்தர் தன்னிடம் சொன்ன கோரிக்கைகளை அம்பிகை நிறைவேற்றி வைக்கும் வரை, இந்த கிளி, அம்பிகையிடம் கோரிக்கைகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சொலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது.
கோவிலுக்குள் ஏராளமான பச்சைக் கிளிகள் பறந்த வண்ணம் உள்ளன. துர்க்கையின் கையிலுள்ள கிளியால் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விடுவதால், இந்த துர்க்கையை 'சுகபிரம்ம துர்க்காதேவி' ( 'சுகம்' என்றால் கிளி ) என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்.