திருமீயச்சூர் மேகநாதர் கோவில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். திருமீயச்சூர் தலத்தில், லலிதாம்பிகை, மிகுந்த கலை அழகுடன், தன் வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டவாறு, ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இப்படி வலது காலை மடித்த அம்பிகையை வேறெங்கும் காண்பது அரிது.

பக்தையிடம் கால் கொலுசு கேட்ட லலிதாம்பிகை அம்மன்

லலிதாம்பிகையின் அலங்காரத்திற்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களும் இருந்தன. அம்பிகை தனக்கு வேண்டிய கால் கொலுசை பெற்றுக் கொண்டது ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகும்..

பெங்களூரில் வசித்து வந்த ஒரு பெண்மணி மிகுந்த இறை பக்தி உடையவர். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்தான், தன் அன்றாட பணிகளை மேற்கொள்வார. 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எனக்கு காலில் அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. அப்பெண்மணி கனவில் வந்த அம்பிகை யார் என்று அறிந்து கொள்ள முயன்றார். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை. வைணவக் குலத்தைச் சேர்ந்த அப்பெண்மணி, திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் தாயார்தான் தன் கனவில் வந்தவராக இருக்குமோ என்று அறிந்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவர்கள் எவரும் கனவில் வந்த உருவத்தோடு ஒத்து போகவில்லை. ஒருநாள் தற்செயலாக ஆன்மீக மாத இதழ் ஒன்றில் லலிதாம்பிகையின் உருவப்படத்தை பார்த்தார. தன் கனவில் வந்தது இந்த அம்பிகைதான் என்றுணர்ந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததால்தான் தனக்கு இந்த பாக்கியம் என்று மகிழ்ந்தார். உடனே அம்பிகைக்கு கொலுசை காணிக்கையாகத் தர விரும்பினார. திருமீயச்சூர் கோவிலுக்கு வந்து விவரங்களை தெரிவித்தார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் கால் பீடத்தில் ஒட்டி இருப்பதால், கொலுசு அணிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் அப்பெண்மணியோ, கொலுசை கேட்டது அம்மன்தான் என்றும், எனவே அதை அவள் கண்டிப்பாக அணிந்து கொள்வாள் என்றும் வற்புறுத்தினார்.

அர்ச்சகர்கள் மீண்டும் கொலுசை அம்மனுக்கு அணிவிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அம்மனின் கணுக்காலலுக்கும் பீடத்துக்குமிடையே முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதையும், அதனை இத்தனை காலம் அபிஷேகப் பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் பகுதியை சுத்தம் செய்து கொலுசையும் அம்மனுக்கு அணிவித்தனர். அப்பெண்மணி அம்மனின் உத்தரவை நிறைவேற்றியதை எண்ணி ஆனந்தமடைந்தார். அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் - லலிதாம்பிகை அம்மனின் நெய் குள தரிசனம்

லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், நவராத்திரி விஜயதசமியிலும், மாசி மாத அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. இந்த வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் மூன்று மூட்டை அரிசியில் சமைத்த சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் மற்றும் அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இந்த நைவேத்திய பொருட்கள் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப்பொங்கலை ஒரு பெரிய பாத்தியாக அமைத்து, அதில் இரண்டரை டின் நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும்போது, தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் பிரதிபலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே தரிசிக்கக் கூடிய தலம்

காஞ்சி மகாபெரியவர் இதலத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இத்தலம் மிகவும் புண்ணியமான க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களே இத்தலத்திற்கு வர முடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஸ்ரீலலிதாம்பிகை, ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்’ என அருளினாராம்.

இத்தலம், திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 
Previous
Previous

கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் கோவில்

Next
Next

கூத்தனூர் சரஸ்வதி கோவில்