வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர்
திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டுதான், முதலில் தனது திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கினார்.
முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த தலமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. இத்தலத்து இறைவன் திருநாமம் ஆதிநாதர். தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும்பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஆதிநாயகி.
சிவபெருமான் நடராஜராக ஆடும் ஆனந்த தாண்டவத்தின் போது தனது வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலைத் தூக்கிய வண்ணம் காட்சி அளிப்பார். ஆனால் வயலூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜரோ சதுர தாண்டவ கோலத்தில், காலடியில் முயலகன் இல்லாமல் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். நடராஜரின் சதுர தாண்டவ கோலம் என்பது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் முக்தி தரும் தலம்
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீது அமர்ந்திருக்கையில், மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானையும் இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில், ஞானியர்க்கு முக்தி தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகப் பெருமான் தன் மனைவியருடன் சிவபூஜை செய்த திருப்புகழ் தலம்
வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வயலூர் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. மற்றத் தலங்களில் தாய் தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூசை செய்திருக்க, வயலூரில் மட்டும் தெய்வயானையுடனும், வள்ளியுடனும் சேர்ந்து பூசை செய்தார்..தாய் தந்தையரை வணங்காதவர்களுக்கு இறைவனருள் கிட்டாது என்பது வேதவாக்கு. முருகப்பெருமான், இங்கு தன் கையிலுள்ள வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து,அதில் நீராடி தன் மனைவியருடன் பெற்றோரைப் பூசித்து வழிபட்டார்..