திருமுருகநாதர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருமுருகநாதர் கோவில்

கூப்பிடு விநாயகர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.

ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்.

தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.

பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.

வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

Read More
முருகநாதேசுவரர் கோயில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

முருகநாதேசுவரர் கோயில்

முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்

திருமுருகன்பூண்டி, திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம். முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.

பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம்” என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

Read More