திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்
மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார். கருவறையில் மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில், உயரமான வடிவில் காட்சியருள்கிறார்.இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் இவரை வணங்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு கைகளிலும் நான்கு சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்சினைகளுக்கு சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இத்தலம் நவகிரக தோஷங்களை போக்கக் கூடிய தலம். திருமோகூர் ராகு கேது தலமாகும். ராகு கேதுவால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார தலமாக விளங்குகிறது.
காளமேகப்பெருமாள் கோவில்
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலம்
மதுரைக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் திருமோகூர், பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, 'பெண்ணாகி இன்னமுதன்' என்றும் பெயர் உண்டு.