திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்
கை விலங்குடன் காட்சி அளிக்கும் பால அனுமன்
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நேர் எதிரே, சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில். திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள்
இக்கோவிலுக்குச் சென்று ஆசி பெற வேண்டும், பேடி ஆஞ்சநேய சுவாமியின் ஆசீர்வாதம் முழுமையான பயணத்தைக் குறிக்கிறது. ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் மகா துவாரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில், பேடி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆஞ்சநேயர், பால அனுமன் தோற்றத்தில், கைகள் கூப்பிய அஞ்சலி முத்திரை கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் பால அனுமன் தனது வாகனமான ஒட்டகத்தைத் தேடி காடுகளில் அலைந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனாதேவி, பால அனுமானைத் தடுக்கும் முயற்சியில், அவனைக் கைவிலங்கிட்டு, தான் திரும்பி வரும் வரை ஸ்ரீவாரி கோவில் முன் இருக்குமாறு தனது அன்பு மகனுக்கு உத்தரவிட்டதாக புராணம் கூறுகிறது. பின் அஞ்சனா தேவி அருகில் இருந்த மலையில் தவம் செய்ய சென்று விட்டாள். இதனால் தான், திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி, அவள் பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.
தம் அன்பான சீடன் கோயிலின் முன் தனியாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வர பகவான், ஒவ்வொரு நாளும் பால அனுமனுக்கு சரியான நேரத்தில் உணவை வழங்கவும், அவரது தாயார் அஞ்சனாதேவி, திரும்பி வரும் வரை அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் கோயில் குருக்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொரு நாளும் ஸ்ரீ பூவராகசுவாமிக்கும், ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கும் நைவேத்தியம் சமர்பிக்கப்படும் அதே நைவேத்தியம் இந்தக் கோவிலுக்குக் கொண்டு வந்து அனுமனுக்குப் படைக்கப்படுகிறது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பிரம்மதேவன் பெருமாளுக்கு நடத்திய திருமலை பிரம்மோற்சவம்
படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே 'பிரம்மோற்சவம்' ஆகும். திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால், வேத ஆகமங்களின் அடிப்படையில், அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, நடத்தப்படும் உற்சவம் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின்படி மற்ற திருவிழாக்களை விட இந்த பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வந்த பிரம்ம தேவர், பெருமாளுக்கு விழா எடுத்தார். இதுவே புகழ்பெற்ற பிரம்மோற்சவ விழாவாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கோவில்களை விட திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் தனித்துவமானது.
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், 'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரம்மோற்சவத்தின் காலை மாலை இருவேளைகளிலும்,வெங்கடேசப் பெருமாள் தனது துணைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விதவிதமான வாகனங்களில் கோவிலைச் சுற்றி வலம் வருவார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திருமலையில் வந்து கூடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா திருவோண நாளில் நிறைவு பெறும்.
இந்த ஆண்டு திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, செப்டம்பர் 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விபரங்கள்
செப்டம்பர் 18 மாலை - த்வஜரோஹனம்
செப்டம்பர் 18 இரவு - பெரிய ஷேச வாகனம்
செப்டம்பர் 19 காலை - சின்ன ஷேச வாகனம்
செப்டம்பர் 19 இரவு - ஹம்ச வாகனம்
செப்டம்பர் 20 காலை - சிம்ம வாகனம்
செப்டம்பர் 20 இரவு - முத்துப்பந்தல் வாகனம்
செப்டம்பர் 21 காலை - கற்பக விருட்ச வாகனம்
செப்டம்பர் 21 இரவு - சர்வ பூபால வாகனம்
செப்டம்பர் 22 காலை - மோகினி அவதாரம்
செப்டம்பர் 22 இரவு - கருட வாகனம்
செப்டம்பர் 23 காலை - ஹனுமந்த வாகனம்
செப்டம்பர் 23 மாலை - தங்க ரத ஊர்வலம்
செப்டம்பர் 23 இரவு - கஜ வாகனம்
செப்டம்பர் 24 காலை - சூர்ய பிரபை வாகனம்
செப்டம்பர் 24 மாலை - சந்திர பிரபை வாகனம்
செப்டம்பர் 25 காலை - ரதோற்சவம்
செப்டம்பர் 25 மாலை - அஸ்வ வாகனம்
செப்டம்பர் 26 அதிகாலை - பல்லக்கு உற்சவம்
செப்டம்பர் 26 காலை - சக்ர ஸ்நானம்
செப்டம்பர் 26 மாலை - த்வஜ ஆவரோஹனம்
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருப்பதி ரத சப்தமி உற்சவம்
தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்
சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.
சிறிய சேஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை
கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை
அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை
கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை
சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை
சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams
2. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
3. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
.
பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள்
ஹாதிராம் பாவாஜி என்ற ஒருவர் வடநாட்டைச் சேர்ந்தவர். திருப்பதி பெருமாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் பக்தியை ஏற்று வெங்கடேசப் பெருமாள், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். தன்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று ஹாதிராம் பாவாஜி, வெங்கடேசப் பெருமாளைக் கேட்டுக கொண்டார். வெங்கடேச பெருமாளும் அதையேற்று ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாடினார்.
ஒருநாள் ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாச் சென்ற பெருமாள் தான் அணித்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை ஹாதிராம் பாலாஜி தங்கியிருந்த மடத்திலேயே விட்டுச் சென்று விட்டார். ஹாரத்தைக் கண்டெடுத்த ஹாதிராம் பாலாஜி, காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் திருப்பதி கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற அர்ச்சகர்கள் ஹாரம் இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஹாரத்தை வைத்திருந்த ஹாதிராம் பாலாஜியை, திருடன் என்று அதிகாரிகள் முடிவெடுத்து தண்டித்தனர். ஹாதிராம் பாலாஜி, பெருமாளே நேரில் வந்து சொக்கட்டான் விளளயாடிய உண்மையை சொல்லியும் யாரும் அவரை நம்புவதாக இல்லை. பாலாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அனைத்தையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். ஹாதிராம் பாலாஜி பக்தியுடன் பெருமாளை தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் அனைத்து கரும்புக் கட்டுகளையும் தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார்.
திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஹாதிராம் பாவாஜியின் அதிஷ்டானம் உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
2. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருவேங்கடவனின் மாமனார்
வைண மத ஆச்சார்யரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். கர்நாடகத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற் பெயர் அனந்தன். இவர் இராமானுசரின் விருப்பத்திற்கிணங்க, திருமலையில் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து தினமும் மாலை தொடுத்து திருவேங்கடவனுக்கு சமர்பித்து வந்தார்.
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே அலர்மேல்மங்கை நாச்சியாரை பிணையாக சிறைப்படுத்தினார்.
பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சி நடுங்கினார். முன்னிரவில் தானே தன் மனைவியாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி, அனந்தாழ்வார் மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
உலகளவில் புகழடைந்த, வைண குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.
திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்
நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.
அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.
ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.
'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.
இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.
அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.
மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.
'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.
'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.
அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.