திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்
சக்தி தட்சிணாமூர்த்தி
சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒரு சமயம் சிவனைப் பார்க்க, இவர் கயிலாயம் சென்றபோது, ஈசன் பார்வதியுடன் அமர்ந்திருந்தனர். அருகில் சென்ற பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கி அவரைச் சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதிதேவிக்கு கோபம் உண்டானது. இவர் தன்னையும் சேர்த்து வணங்கவேண்டும் என்று கூறி ஈசனுடன் நெருங்கி அமர்ந்தார். பிருகு முனிவர் வண்டு உருக்கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார். அப்போது ஈசன், சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, தன்னின் இடபாகத்தை சக்திக்கு அளித்தார். இவ்வடிவமே அர்த்தநாரீஸ்வரர் கோல வடிவம். இக்கோலத்தைக் கண்டும் பிருகு முனிவர்க்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. பிருகு முனிவர் பூலோகத்தில் சிவத் தல யாத்திரை மேற்க் கொண்டபோது, கள்ளி வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூசித்த சுவாமியை கள்ளிச்செடியிலுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது ஈசன் அவர் முன் தோன்றி, சிவமும் சக்தியும் ஒன்றே! சக்தி இல்லாமல் சிவம் இல்லை. சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை. என்று உபதேசத்தைக் கூறிவிட்டு, அம்பாளை தன் மடியில் அமரவைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்து நலன்களையும் அடையலாம். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
சிவாநந்தீஸ்வரர் கோயில்
முருகப் பெருமான் ஜெப மாலை,அமுத கலசம் தாங்கி காட்சிதரும் தேவாரத் தலம்
தேவாரத் தலமான திருக்கள்ளில் கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில், பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார். முருகப் பெருமானது சன்னதி, சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.