
திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.