திருச்சானூர் பத்மாவதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி கோவில்

திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார்

ஆந்திர மாநிலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். இக்கோவில் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற பெயரும் உண்டு. சொல் வழக்கில், அலமேலு என்று அழைப்பார்கள். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கைத் தாயார்.'

திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டார் என்றும், அந்த விளக்குகள் இன்றும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டார் என்கின்றது தலபுராணம். அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால், இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று தொண்டைமான் பெயரிட்டான்.

இந்த ஆலயத்தில் வழிபட்டப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல் மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்னார். குறத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ‘வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ' எனும் அலர்மேல் மங்கை தாயார் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More