கோதண்டராமர் கோவில்
பார்ப்பவரை பரவசமடையச் செய்யும் ராமர்
திருவாரூர் மாவட்டத்தில், ராமர் கோவில்கள் அமைந்துள்ள தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்னும் ஐந்து தலங்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. இலங்கை போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் ஏந்தி வலப்புறம் சீதை இடப்புறம் இளைய பெருமாளுடன் நின்ற திருக்கோலத்தில் அனுமனுடன், இத்தலத்தில் காட்சி தருகிறார். 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் சுயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமபிரானின் 5 அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரகமாய் எழுந்தருளி இருக்கும் தலம் இது. ராமரின் ஐந்தடி உயர பஞ்சலோக சிலாரூபம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவர் திருமேனியில், திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகள், திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் பகுதிகளில் காணப்படுகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே விரல்களில் நகங்களும் அமைந்திருக்கின்றன. திருமார்பில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே காட்சியளிக்கின்றன. கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருடைய திருமேனியின் முழங்கால்கள், மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்டு, கால்களில் பச்சை நரம்போடுவது தெரிகின்றன. கால்களில் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷை மற்றும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் காட்சியளிக்கின்றன. மற்ற திருத்தலங்களில் அர்த்த சந்திர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீராமன், இந்த ராம சரத்தை காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக பிரயோகித்தார்.