தகட்டூர் கால பைரவர் கோவில்
குழந்தை உருவிலான கால பைரவர்
வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில், 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது தகட்டூர் கால பைரவர் கோவில். இக்கோவிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். காசியில் இருப்பது போல், மூலவராக கால பைரவர் எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இக்கோவில் மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. இவ்வூருக்கு 'யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது.சுந்தரர் பாடிய வைப்புத்தலமாகும்.
காசியில் கருடன் பறக்காது இருப்பதற்கும், பல்லி கத்தாது இருப்பதற்கான காரணம்
ராவணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமர், ராமேசுவரத்தில் சுயம்பு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்ய விரும்பினார். அனுமனை சுயம்பு சிவலிங்கத்தை கொண்டுவருவதற்காக காசிக்கு அனுப்பினார். காசிக்கு சென்ற அனுமான் பல சிவலிங்கங்களை கண்டார். ஆனால் அவை அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் பிரதிட்டை செய்யப்பட்டவை. எனவே சுயம்பு லிங்கங்கள் அல்ல. அனுமான் எத்தனை தேடியும் சுயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் அனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. சுயம்பு லிங்கம் ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் துவங்க, பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. அனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ கால பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் அனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட, பைரவர் கோபம் கொண்டு அனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே அனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட கால பைரவரும் சினம் தணிந்தார்.
சிவன் கோவில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோவிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதனால் பைரவர் காசி சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல அனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்தார். பின் அனுமானுடன் சென்று அதை ராமபிரானுக்கு அளித்தார். பின் தான் சென்ற வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் அனுமானுடன் சென்றபோது, வழியில் வந்த தகட்டூர், காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்ததால், தகட்டூரில் ஒரு கணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் அனுமானுக்கு உதவி செய்ததினால், இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.
தகட்டூரை அடைந்த பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். இந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளன். அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.