சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்
இசை ஒலி எழுப்பும் அபூர்வமான இசைக்குதிரைகள்
நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலாயன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய கோவில்களில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இருக்கின்றன. இந்த இசைத் தூண்கள் நம் முன்னோர்களின் சிற்பத் திறனையும், அறிவியல் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில், இந்த இசைத் தூண் வேலைப்பாடுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் இசைக் குதிரைகள் விளங்குகின்றன.
உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் சேந்தமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.
அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.
பெரிய சதுரவடிவ கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும், கலைநயம் கொண்டு விளங்குகின்றது. சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது. இப்படி இசை ஒலி எழுப்பும் சிற்பங்களை மற்ற தலங்களில், நாம் காண்பது அரிது.