கோட்டை வாசல் விநாயகர் கோவில்
கோவிலை இடிக்க உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரியை மிரட்டிய விநாயகர்
ராமநாதபுரம் அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது கோட்டை வாசல் விநாயகர் கோவில். மிகவும் பழமை வாய்ந்தது இக்கோவில். இத்தலத்து விநாயகர் ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமநாதபுரம் மன்னர்கள் எந்தவொரு முக்கிய செயலையும் இவரை பூஜை செய்தபின்தான் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கருவறையில் கோட்டை வாசல் விநாயகர் வல்லபையை தமது மடியில் இருத்தி கொண்டு நமக்குக் காட்சி தருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோட்டை வாசல் பிள்ளையாருக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இக்கோயிலிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகம் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறி, அந்த கோட்டை வாசல் விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.
அன்று இரவே ஆங்கிலேய அதிகாரியின் உறக்கத்தின் பொழுது, கனவில் யானை உருவத்தில் கோட்டை வாசல் விநாயகர் தோன்றி ஏறி மிதிப்பது போல மிரட்டி உள்ளாராம். விடியற்காலையில் ஆங்கில அதிகாரி கோவிலை இடிக்கும் உத்தரவை நிறுத்தி உள்ளார்.
தெய்வ சக்தியை உணர்ந்த அந்த அதிகாரி, தன் தவறை உணர்ந்து கோவிலுக்கு வந்து கோட்டை வாசல் விநாயகரை வணங்கி மன்னிப்பும் கேட்டுச் சென்றாராம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த ஆலயத்தை அரண்மனைக்கு எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்பது வரலாறு.
இவரை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை இவர் நிறைவேற்றித் தருவதால், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிதறு தேங்காய் போடுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிவிடும் முருகன் கோவில்
கருவறையில் விநாயகரும், முருகனும் சேர்ந்து காட்சி தரும் தலம்
ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் வழிவிடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக கோவில்களில் நாம் உள்ளே சென்றதும் விநாயகரை வணங்கிவிட்டு திரும்பி வரும் போது முருகனை வழிபடுவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவில் கருவறையில் விநாயகரும், முருகனும் சேர்ந்து காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும். இத்தகைய தரிசனத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
வழிவிடும் முருகன் என்று பெயர் ஏற்பட்டதின் காரணம்
பல ஆண்டுகளுக்கு முன், தற்போது கோவில் இருக்கும் இடத்தில் ஒரு அரச மரமும், அதனடியில் இருந்த வேலுக்கு பூஜையும் நடத்தப்பட்டு வந்தது. அரச மரத்திற்கு அருகில் இருந்த நீதிமன்றத்திற்கு வருபவர்கள், தங்கள் வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமென்று இந்த வேலை வணங்கிச் சென்றார்கள்.
இந்த முருகனை வணங்கியவர்கள் வாழ வழி பெற்றதால் இவருக்கு வழிவிடும் முருகன் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வந்து வழிபடுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், வாழ்க்கை முழுவதும் துணையாகவும் விளங்குவார் எனபது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
சனி பகவானின் பாதிப்பைக் குறைக்கும் சாயா மரம்
சனி பகவானின் தாயார் சாயாதேவி. இக்கோவிலில் சாயா எனறொரு மரம் உள்ளது. இம்மரத்தை சாயாதேவியின் அம்சமாக இங்குள்ள மக்கள் வழிபடுகிறார்கள். எனவே இத்தலத்துக்கு வந்த் வழிபடுபவர்களை, தன் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சனி பகவான் அவர்களுக்குத் தன்னால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதாக ஐதீகம்.
சகோதரர்களின் சொத்துப் பிரச்சனைத் தீர்க்கும் தலம்
சொத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் சகோதரர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் பிரச்சனைத் தீர்ந்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுவாமிநாத சுவாமி கோவில்
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாறுபட்ட நிலையிலிருந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன்
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.
ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்
மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.