கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்
ஜாதக தோஷங்களை நீக்கும் பெருமாள்
கோயம்புத்தூரிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவகோடி நாராயணப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
பிரார்த்தனை
செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.