நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.
நத்தம் மாரியம்மன் கோவில்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்
திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.
கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
நேர்த்திக் கடன்
தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.
சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.
இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.
கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.
வாலீஸ்வரர் கோவில்
காரிய தடையை நீக்கும் கணபதி
சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காரிய சித்தி கணபதி, தொந்தியில்லா கணபதியாகக் காட்சித் தருகிறார். பிரம்மனுக்கு அருளிய இவர், முக்கண்ணணாக ருத்திராட்ச மாலை,பரசு ஏந்தி ஓங்காரவடிவில் தாமரை மொட்டில் அமர்ந்துள்ளார். இவரை வணங்குவதால் நாம் எடுத்த காரியம் நல்லபடியாக முடியும். திருமணத்தடை, உத்தியோகத்தடை, பிள்ளைப்பேறு, போன்ற தடைகளுக்கு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.