நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் தலம்
குபேரன் புதல்வர்கள் பொன் வில்வ சாரரத்தால் வழிபட்ட தலம்
திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். இத்தலத்தில் அமைந்துள்ளகு, 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோயில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், ஐந்தடி உயர லிங்கத்திருமேனியில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் ஜொலிக்கிறார். இவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.
அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதினர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார்.
அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர். அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.
அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து 'ஓம் நமசிவாய' என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.
பௌர்ணமி அன்று இத்தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அம்பிகை மெட்டி அணிந்திருக்கும் அபூர்வக் கோலம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இத்தலம் திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி.
இக்கோவில் மகாமண்டபத்தின் இடதுபுறம், இறைவி மீனாட்சியின் சந்நதி உள்ளது. அம்பிகை முன்கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் ஏந்தி நின்ற கோலத்தில், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்பிகையின் கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்திருப்பது ஓர் அபூர்வமான காட்சி ஆகும். திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளம் வயதினர், அம்பிகையின் மெட்டி தரிசனம் கண்டால் வெகுவிரைவில் அந்த பாக்கியம் அருளப் பெறுகிறார்கள்.