வைத்தியநாத சுவாமி கோவில்
திருமலை நாயக்க மன்னரின் வயிற்று வலியை குணப்படுத்திய வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது வைத்தியநாதசுவாமி திருக்கோவில்.
வைத்தியநாதசுவாமி நடத்திய திருவிளையாடல்கள்
இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது போன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் வைத்தியநாதசுவாமி அரங்கேற்றியிருக்கிறார்.
திருமலை நாயக்கரின் வயிற்று வலியை தீர்த்த வைத்தியநாதர்
ஒரு சமயம், மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு 'குன்ம நோயினால்' பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக திருமலை நாயக்கர், மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய தான் வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் . இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் 'பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
திருமலை நாயக்கர் அமைத்த முரசு மண்டபங்கள்
திருமலை நாயக்கர், மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறிய பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டிய பின் தான், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்வார். அதற்குப் பிறகுதான் உணவருந்துவார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல் மண்டபங்கள் உள்ளதை காணலாம்.
வைத்தியநாத சுவாமி கோவில்
பிரசவப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலம் மடவார் விளாகம் ஆகும். இறைவன் திருப்பெயர வைத்தியநாத சுவாமி. இறைவி சிவகாமி.
ஸ்ரீவில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது.
மடவார் வளாகம் என பெயர் பெற்றதின் கதை
ஆடல் பாடல்களில் வல்லவரான இரு பெண்கள் இத்தல இறைவன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித் தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம்- இடம்).
தாயாய் வந்து பிரசவம் பார்த்த வைத்தியநாதர்
முனனொரு காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் ஒருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் அவள், தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்த பிறகும் கூட தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு புறப்பட்டுச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப் பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார்.
அத்துடன், 'பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் 'காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்' என்று அருளினார்.
வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்ப சம்பந்தமான நோய்களுக்கு, பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள்.