குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும் தலம்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தலம் குச்சனூர். இத்தலத்தில் சனிபகவான், தனிக் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்து மூலவரான சனீஸ்வர பகவான், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் தன்னுள் ஐக்கியம் என்பதை குறிப்பிடும் வகையில் மூன்று ஜோடி கண்களுடனும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம்,, அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும், இரண்டு பாதங்களுடனும் காட்சியளிக்கிறார். ஏழரை சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.
பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. 'உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது'. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். பின்னர் மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.
அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. 'வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது' என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். 'தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான் சந்திரவதனன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் 'உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான்' என்றும் கூறி மறைந்தார்.
இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார். குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது. அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, திருமணத்தடை உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்தில், வேறு எந்த சனீஸ்வரன் எழுந்தருளியுள்ள தலத்திலும் இல்லாதவாறு, பக்தர்கள் மண் காக பொம்மையை தங்கள் தலையை ஒருமுறை சுற்றி காக பீடத்தில் வைத்து விட்டு, பின்னர் சனிபகவானை வழிபடும் முறை இருக்கிறது.