வெற்றி வேலாயுதசாமி கோவில்
முருகப்பெருமான் தன் வேலால் உருவாக்கிய தீர்த்தம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக்கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார் . வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
அகத்தியர் முனிவர், முருகப் பெருமானை வழிபடஇத்தலத்திற்கு வந்தார். ஆனால் அவர் பூஜை செய்வதற்கான நீர் கிடைக்காததால் வருத்தமுற்றார். அவர் மனம் உருகி முருகப்பெருமானை வேண்ட, முருகப்பெருமான், தன வேலால் இவ்விடத்தில குத்த நீர் வந்தது. அதைக்கொண்டு அகத்தியர் பூஜை செய்தார். அவ்வாறு முருகப்பெருமான் குத்திய இடத்தில இருந்து நீர் இன்றும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது . குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் 'ஊத்துக்குளி' என்று இவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது .
அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .