வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்
கம்பருக்கு அருளிய துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. தேரழுந்தூரில் வாழ்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழை நீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. பின்னர், கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தரும் வனதுர்கா பரமேஸ்வரி.
கதிராமங்கலம் தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வனதுர்கா பரமேஸ்வரி, முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம். சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே வனதுர்கா பரமேஸ்வரியை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வனதுர்கா பரமேஸ்வரிக்கு அர்ச்சனை செய்யும் போது அவளது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகின்றன.இது இன்றும் நடக்கும் அதிசயமான நிகழ்வாகும்.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
தாமரைப்பூவில் தாள் பதித்த வண்ணம் காட்சி தரும் துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.ஆனால் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.