தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.
கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.
நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.
தாமல் வராகீசுவரர் கோவில்
பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்த அபூர்வ சிவலிங்கத் திருமேனி
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இறைவனின் திருநாமம் வராகீசுவரர், இறைவியின் திருநாமம் கௌரி அம்பாள். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சில சிவத்தலங்களை பெருமாள் தசாவதார கோலத்தில் வழிபட்டுள்ளார். அதில் இத்தலம் பெருமாள் வராக மூர்த்தி கோலத்தில் வழிபட்ட தலமாகும். இத்தலத்து சிவலிங்கத் திருமேனியில் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து. கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து. அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலுடன் மோதிய போது, சிவபெருமானின் திருமேனியில் சங்கு, சக்கரங்கள் பதிந்தன. அதனால் தான் இக்கோவில் சிவலிங்கத் திருமேனியில் சங்கு சக்கரம் பதிந்த அடையாளங்கள் உள்ளன.
இக்கோவிலில் அஷ்ட பைரவர்களும் தூண்களில் எழுந்தருளி உள்ளது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடை விலகும்.
இக்கோவில் காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குகின்றது, அதனால் ராகு கேது தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.