வேதபுரீசுவரர் கோவில்

வேதபுரீசுவரர் கோவில்

வியக்க வைக்கும் வடிவமைப்பு கொண்ட கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது, தேவாரத் தலமான வேதபுரீஸ்வரர் கோவில். இறைவி: இளமுலைநாயகி. இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. 'திரு' அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று.

பொதுவாக சிவாலயங்களில் நாம் ஒரிடத்திலிருந்து சுவாமியை மட்டுமோ அல்லது சுவாமி, அம்பாள் இருவரை மட்டும்தான் தரிசிக்க முடியும். அந்த வகையில்தான் கோவிலும், கோவில் சன்னதிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் வேதபுரீஸ்வரர் கோவிலில், நாம் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசனம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது. இத்தகைய கோவிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வடிவமைத்த நம் முன்னோர்களின் வடிவமைப்புத் திறன் நம்மை வியக்க வைக்கின்றது.

Read More
வேதபுரீசுவரர் கோவில்

வேதபுரீசுவரர் கோவில்

சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகாரத் தலம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தேவாரத் தலமான வேதபுரீஸ்வரர் கோவில், சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது.

திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அபூர்வமான பதினொரு தலை நாகலிங்கம்

இக்கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு உயரமான பீடத்தில் நாகலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. பதினொரு தலையுள்ள இதை சனிக்கிழமை இராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பீடத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் பதினொரு யானைகள், அதன்மேல் பதினொரு நாகங்கள் தாங்க அதன் மேல் பதினொரு தலை நாகம் படம் விரித்துள்ளது. நாகத்தின் உடல் சுருள்களால் அமைந்த பீடம் மீது சிவலிங்கம் உள்ளது.

இந்த பதினொரு தலையுள்ள நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். ஆமை தோஷமும் நிவர்த்தி ஆகிறது.

ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Read More