பெருநா சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் வேலை தலைகீழாக பிடித்திருக்கும் தலம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. இப்படி, மற்ற முருகன் கோவில்களில் இருந்து வேறுபட்டு, முருகன் வேலை தலைகீழாக பிடித்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முருகன் வேலை தலைகீழாக பிடித்து இருப்பதற்கான காரணம்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது. தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.
பிரார்த்தனை
இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.