அரியமங்கலம் வைத்தியநாத சுவாமி கோவில்
சிறுமி ரூபத்தில் வந்து ரயில் விபத்தை தடுத்த தையல்நாயகி
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரியமங்கலம். இத்தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் தையல்நாயகி. கருவறையில் நின்ற கோலத்தில் தையல்நாயகி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அம்பிகை மேல் இரு கரங்களில் தாமரை மலரைத்தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்கிறாள்.
பக்தனுக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து அரியமங்கலம் வந்து எழுந்தருளிய தையல்நாயகி
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருச்சி ரயில்வேயில் இஞ்சின் டிரைவராக பணி புரிந்து வந்தார். அவர் மயிலாடுதுறையின் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் தையல்நாயகி மேல் தீராத பக்தி கொண்டவர். வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தையல் நாயகி அம்மனை வழிபட்டு வருவார்.
அவர் ஒரு நாள், என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரயில் பாதையைப் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள். அவர் அவசரம் அவசரமாக ரயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.ரயில் நின்றதும் பயணிகள் பலரும் இறங்கி ஓடி வந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தைப் பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். சிறிது நேரத்தில் டிரைவர், பயணிகள் உள்பட பலரும் விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினர். சிறுமி காணவில்லை. அன்று இரவு அவர் கனவில் வந்தாள் அந்தச் சிறுமி. 'நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்' என்றாள் அந்தச் சிறுமி.
மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார். கரங்கூப்பி வணங்கினார். 'தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்' என்றார். 'எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு' என்றாள் அந்த சிறுமி. 'அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்.'
'வேண்டாம். நீ எனக்காக சிலை செய்ய வேண்டாம். நீ நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும்போது உன்னுடன் நெல் மூட்டையை கொண்டு செல். அங்குள்ள சித்தரிடம், பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும். எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்' என்று கூறியவாறு சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்து விழித்தார்.
மறுநாளே தான் கண்ட கனவின்படி அவர் கொல்லிமலைக்குப்புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது. வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.
பிரார்த்தனை
மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் தையல்நாயகியின் சன்னதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய் வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முகப்பரு நீங்க அன்னைக்கு முன் மகாமண்டபத்தில் உள்ள தனியிடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு 5 செவ்வாய்க் கிழமைகள் பிரார்த்தனை செய்தால் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.