அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில்
திருபாற்கடல் பள்ளி கொண்ட கோலத்தை பெருமாள் காட்டி அருளும் திவ்ய தேசம்
திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள அன்பில் என்ற ஊரில் அமைந்துள்ளது ஐந்தாவது திவ்ய தேசமான சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அழகியவல்லி. பஞ்சரங்க தலங்களில் ஒன்று அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில். அரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் அமைந்துள்ள மேடான தீவு அல்லது திட்டு என்று பொருள். காவிரி ஆறு பிரியும் இடத்தில், அடுத்தடுத்து அமைந்துள்ள 5 வைணவ தலங்கள் பஞ்சரங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
திருபாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல, திருமால் தாரக விமானத்தின் கீழ் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்த பெருமாள்
மூலவர் சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒருசமயம் நான்முகனான பிரம்ம தேவருக்கு தானே உலகில் அழகானவர் என்றும், தன் படைப்பினாலேயே உலகில் தன்னால் படைக்கப்படும் உயிரினங்களும் அழகாக உள்ளதாக ஆணவம் கொண்டார். இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு, பிரம்ம தேவரை சாதாரண மானிட பிறவியாக பிறக்கும் படி சாபம் அளித்துள்ளார். விஷ்ணு அளித்த சாபத்தின் படி பூமியில் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார் பிரம்மா. கடைசியாக இந்த தலத்திற்கு வந்த போது ஒரு அழகான இளைஞரின் தோற்றத்தில் மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார்.
அவரின் அழகை கண்டு வியந்து போன பிரம்மா, எப்படி இவ்வளவு அழகாக உள்ளீர்கள் என அவரிடம் கேட்டார். அப்போது விஷ்ணு தனது உண்மையான வடிவத்தை காட்டி, திருக்காட்சி அளித்தார். அழகு நிலையானது இல்லை; அதற்காக ஆணவம் கொள்ளக் கூடாது என்பதை புரிய வைக்க பிரம்மனுக்கு அழகிய இளைஞனின் உருவில் காட்சி கொடுத்ததால் இந்த தல பெருமாள் சுந்தரராஜ பெருமாள் என்றும், வடிவழகிய நம்பி என்றும் திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார்.
ஆண்டாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி
இத்தலத்தின் முன்மண்டபத்தில் ஆண்டாள் நின்ற கோலத்தில் தனிசன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அதே சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அவரின் உறு்சவர் திருமேனி காணப்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு கோலங்களில் ஆண்டாளை இங்கே தரிசிப்பது சிறப்பு.
சத்தியவாகீசுவரர் கோயில்
செவிசாய்க்கும் பிள்ளையார்
திருச்சிக்கு அருகில் இருக்கும் தேவாரப் பாடல் பெற்ற அன்பில் தலத்தில், பிள்ளையார் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் இருக்கிறார. கொள்ளிடத்துத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டதால், இவ்விநாயகர் 'செவிசாய்க்கும் பிள்ளையார்' எனப் பெயர் பெற்றார். பக்தர்களின் குறைகளைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்த்து வைப்பார் என்பதும், இப்பெயர் வரக் காரணமாகும்.