அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்
மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.