ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்
பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.
கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.
பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.