வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்
கலை அழகு மிளிரும் சிற்பங்கள்
வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டது இக்கோவில்.
நம் முன்னோர்கள் பக்தியை செலுத்துவதற்காக, ஆண்டவனின் இருப்பிடமாக அமைத்த கோவில்கள், கலைகளையும் சேர்த்து அளிக்கும் கலைக்கூடங்களாகவும் விளங்கின. சிற்பங்களையும் ஓவியங்களையும், சேர்த்து அளிக்கும் கலைக் கோவில்களாயின. அத்தகைய கலைக் கோவில்களில் ஒன்றுதான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்.
இக்கோவிலுக்குள்ளே நுழைந்தால், வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோவிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் வெளித்தூண்களில் இரண்டு ஆள் உயரத்திற்கான யாழி, குதிரை மீதமர்ந்த வீரர்களின் சிலைகள் நம் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன.
வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, வில்லுடன் இராமர், ஆஞ்சநேயர், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம் என கண்ணைக் கவரும் பலவிதமான சிற்பங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மத்தியில் அழகான மேடையொன்று ஆமையின் முதுகில் இருப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கருகில் உள்ள தூண்களில் சாளரம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் கூரையில் மூன்று சுற்றுகளாக கிளிகள் தேங்காயை கொத்த அமர்ந்திருப்பது போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மண்டபத்தின் அழகில் லயித்த வெள்ளையர் தளபதி ஒருவர். தூண்களோடு பெயர்த்துச் செல்ல விரும்பினார் இதற்காக வெளிநாட்டிலிருந்த கப்பலையும் வரவழைத்தார் ஆனால் அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால் இத்திட்டத்தைக் கைவிட்டார்.
தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில்
முருகனின் பாதச்சுவடுகள் பதிந்த மலை
வேலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள புதுவசூர் என்ற கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில். இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த மலைக்கோயிலுக்கு நடந்து செல்ல 220 படிக்கட்டுகளும், வாகனங்கள் செல்ல சாலை வசதியும் இருக்கின்றது. கருவறையில் முருகன், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகப்பெருமானும் வள்ளியம்மையும் சம உயரத்தில் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும். தெய்வானை முருகனை விட சற்று குறைவான உயரத்தில் காட்சி அளிக்கிறார்.
வள்ளிமலையில் நம்பிராஜன் மகளாக வளர்ந்து வந்த வள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, முருகன் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி பாதம் பதித்துச் சென்றார். இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில், பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் காட்சி தருகின்றன.
இந்த மலைப்பகுதிக்கு ஒளவையார் வந்தபோது அவரிடம் விளையாட விரும்பிய முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியது இந்த மலையில்தான்.
பிரார்த்தனை
இந்த மலையில் முருகப்பெருமான் தன் திருவடிகளைப் பதித்து இளைப்பாறியதால், இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் மனத் துன்பங்கள் விலகி, முருகனின் அருளால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
லட்சுமி நரசிம்மர் கோவில்
லட்சுமி நரசிம்மரின் அபூர்வ கோலம்
வேலூரிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் சிங்கிரி கோவில் என்னும் ஊரில் லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 100 படிகள் கொண்ட சிறிய மலையின் மீது அமைந்துள்ளது.
இக்கோவிலில் கர்ப்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் சேர்ந்து அமையப்பெற்ற மிகப்பெரிய கருவறையாக உள்ளது. இந்த மிகப்பெரிய கருவறையில் சுமார் ஆறு அடி உயர லட்சுமி நரசிம்மர் நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். மேல் இரண்டு திருக்கைகளில் சங்கு சக்கரமும், இடது கையை தனது மடியின் மீதும், வலது கையால், தனது வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்த வண்ணமும் சாந்த சொரூபியாய் காட்சியளிக்கிறார்.
பொதுவாக தாயார் நரசிம்மரின் இடது பக்க திருமடியில்தான் வீற்றிருப்பார். ஆனால் இத்தலத்தில் தாயார் நரசிம்மரின் வலது பக்க திருமடியில் அமர்ந்திருக்கும் கோலம் மிக அபூர்வமானதாகும்.
இத்தல வட்சுமி நரசிம்மரை வேண்டிக் கொண்டால்ங நமது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேந்நித் தரூவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.``