விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோவில்
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல் மேட்டிற்கு இடையே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற தேவார வைப்புத்தலம். இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் இட்சுரச நாயகி. இட்சு என்றால் கரும்பு, ரசம் என்றால் சாறு என்ற வகையில் கரும்புச் சாறு போல பக்தர்களுக்கு நல்ல அருளையும், இனிய வாழ்வினையும் அளிப்பதால் இறைவி அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல். இந்த வரிசையில் விளத்தொட்டி தலம், பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம்.
சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும், முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது என்பதால், வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.
'தொட்டில் முருகன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.