விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில்
பங்குனி பொங்கல் திருவிழா - கோவில் கொடியில் கட்டிய சாதங்கள் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும் அதிசயம்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், தென் மாவட்டங்களில் பிரபலமான அம்மன் கோவில்களில் ஒன்று. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் முகப்பு கோபுரமானது, வேறு எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பராசக்தி மாரியம்மன் இடது கால் மடித்து, வலது கால் தொங்கும் கோலத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள்.
இக்கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா, தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் கோவில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோவிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடம்பில் கரும் புள்ளி செம்புலி குற்றி, வேம்பால் அலங்கரிக்க பட்ட ஆடை உடுத்தி, அக்னிச்சட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, கரகம், ரதம் இழுத்து நகரம் முழுவதும் ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாவானது பங்குனி முதல் நாளில் தொடங்கும். பொங்கல் பண்டிகைக்கு முன், ஏழு தினங்களுக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை நல்ல நேரத்தில் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தூப, தீபம் செய்வித்து ஆலய அர்ச்சகர், அம்மன் பணியாளர், சாட்டு முரசு கொட்டும் சாம்பன் அனைவரும் அம்மன் முன் காப்பு கட்டுவார்கள். பொங்கல் சாற்றிய தினத்தில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். சாற்றிய தினத்திலிருந்து பதினைந்தாம் நாள் இரவு மாரியம்மன் கோவிலில் கொடியேற்று வைபவம் நடைபெறுகின்றது.கொடியேற்றிய பின் ஏழாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று பொங்கல் விழாவும், பொங்கல் அன்று பொங்கல் வைத்தல், மொட்டை எடுத்தல், உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண்பானை வைத்தல், நீர் ஊற்றுதல், ஆக்கிவைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.
விழா துவங்கி கடைசி ஏழு நாட்கள் இருக்கும் போது கோவிலில் உட்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. அப்பொழுது கொடி துணியுடன் ஐந்து வகையான சாதங்கள் வைத்து துணியில் கட்டி ஏற்றுகின்றனர் திருவிழா முடிந்து கொடியை இறக்கும் போது அந்த சாத மூட்டையை திறக்கின்றனர். ஏழுநாட்களுக்கு பின்னும் அந்த ஐந்து வகை சாதமானது கெடாமல் இருக்கின்றது என்பது தற்பொழுதும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும்.
நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்
இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.
இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.
தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்
இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.
பிரார்த்தனை
தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.
புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்
புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்ட வரலாறு
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவர், புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.
முன்னொரு காலத்தில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஊரில் எஞ்சிய சில மக்களுக்கும் சமைக்க அரிசி கிடைக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு வரகரிசியையே சமைத்து உண்டனர்.அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், தனக்கு உணவு கிடைக்காத நிலையிலும், பிள்ளையாரின் நைவேத்தியத்திற்கு அரிசி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். அதனால் ஊர் மக்களிடம் நைவேத்தியத்திற்காக அரிசி தருமாறு வேண்டினார். ஆனால் மக்களோ, தாங்களே உணவிற்கு வரகரிசியைத்தான் உபயோகப்படுத்தும்போது பிள்ளையாருக்கு எப்படி அரிசி அளிக்க முடியும் என்று வினவினர்.இதனால் மனம் வருந்திய பெரியவர் பிள்ளையாரிடம் கண் கலங்கி நின்றார். பெரியவருக்காக மனமிரங்கிய பிள்ளையார், இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சன்னதியில் வைத்து அருளினார். இதைக் கண்ட பெரியவர் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, தானும் உண்டு மகிழ்ந்தார்.
இதைக் கணட ஊர் மக்கள் அவருக்கு எப்படி பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி கிடைத்தது என்று வினவினார்கள். பிள்ளையார் தனக்கு அருளியதைச் சொல்ல விரும்பாத பெரியவர் மௌனம் சாதித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து துன்புறுத்தத் தொடங்கினார்கள்.
தன் பக்தரைக் காப்பாற்ற விரும்பிய பிள்ளையார், அன்றிரவு ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி தான்தான் அரிசி வழங்கியதாகவும், அந்தப் பெரியவர் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறியருளினார். இதையறிந்த ஊர் மக்கள் மனம் வருந்தி, பெரியவரிடம் மனினிப்புக் கேட்டார்கள்.அவரையே பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.அவர் பரம்பரையினரே இன்றும் இக்கோவிலில் பூஜை செய்கின்றார்கள். அன்றிலிருந்து இப்பிள்ளையார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்றும் புழுங்கல் அரிசிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
வாழைமர பாலசுப்பிரமணியர் கோவில்
பக்தனுக்காக வாழை மரத்தில் எழுந்தருளிய முருகன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் துலுக்கன்குறிச்சி என்ற இடத்தில் வாழைமர பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வாழை மரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது விசேஷமானதாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல விருட்சமாகவும் வாழைமரமே உள்ளது.
19–ம் நூற்றாண்டில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். முருகனை வணங்கிய பின்பே அன்றாட பணிகளை செய்யத் தொடங்குவார். அவர், தனது நிலத்தில் வாழை மரங்களை நட்டு வைத்து அதனை கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தார். மேலும் அவர்,தன்னுடைய ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள முருகப்பெருமானை தினமும் வழிபட்டு வருவார். அந்த ஆலயம் வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் வனமூர்த்திலிங்கபுரம் என்ற ஊரில் இருந்தது.
ஒரு நாள் அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'பக்தனே! நீ தினமும் என்னைக் காண வெம்பக்கோட்டை வர வேண்டாம். நானே உன்னைத் தேடி வந்துவிட்டேன். நீ மிகவும் ஆசையாக பராமரிக்கும் வாழை மரங்களில், இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ, அந்த மரத்தில் நான் இருக்கிறேன்'என்று கூறி மறைந்தார். கனவில் இருந்து விழித்தெழுந்த முருக பக்தர், தன் மீது இறைவன் கொண்டிருக்கும் அன்பை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள செவல்பட்டி ஜமீன்தாரின் கணக்குப் பிள்ளையின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வீட்டின் வாசலில் வைக்க குலை தள்ளிய வாழை மரம் தேவைப்பட்டது. பணியாட்கள் பல ஊர்களில் தேடியும் எங்குமே, குலை தள்ளிய வாழை மரம் கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில், முருக பக்தர் வேலாயுதம் வீட்டு தோட்டத்தில் குலை தள்ளிய வாழை மரம் இருப்பதை அறிந்து, அவரிடம் வந்து கேட்டனர்.
அதற்கு வேலாயுதம், 'இந்த மரத்தில் முருகன் குடியிருக்கிறார். அவரை நான் தினமும் வழிபட்டு வருகிறேன். எனவே என்னால் அந்த மரத்தை உங்களுக்கு தர முடியாது' என்று கூறி மறுத்தார்.
இதனை பணியாட்கள் ஜமீன்தாரிடமும், அவரது கணக்குப்பிள்ளையிடமும் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் கணக்குப்பிள்ளையின் மகனான மாப்பிள்ளை, 'நானே சென்று அந்த மரத்தை கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு, முருக பக்தரின் தோட்டத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வேலாயுதத்திடம் மரத்தை தரும்படி கேட்டார். வேலாயுதம் மீண்டும், 'இது மரமல்ல, நான் வணங்கும் தெய்வம். அதனால் இதனை வெட்டக்கூடாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டார்.
வாழைமரத்திலிருந்து பீறிட்ட ரத்தம்
வேலாயுதம் பேச்சைக் கேட்காமல், கணக்குப்பிள்ளையின் மகன் அரிவாளால், முருகப்பெருமான் குடியிருந்த வாழைமரத்தை வெட்டினார். மரத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மேலும் அந்த இடத்தில் நாகப்பாம்பு ஒன்று தோன்றி, கணக்குப்பிள்ளையின் மகனை தீண்டியது. ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் இந்தச் செய்தியை அறிந்து பதறித் துடித்து ஓடி வந்தனர். இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்து கணக்குப்பிள்ளை கண்ணீர் வடித்தார். 'மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய பிளளையை, பிணக்கோலத்தில் பார்க்கிறேனே' என்று கதறி அழுதார்.
கணக்குப்பிள்ளை மகன் உயிர்ப்பித்து எழுந்த அதிசயம்
பின்னர் கணக்குப்பிள்ளை தன் மகனை உயிர்ப்பித்து தரும்படி, வேலாயுதத்திடம் வேண்டினார். அதற்கு அவர் தன் கையில் எதுவும் இல்லை. முருகப்பெருமானின் கருணையால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூறினார். பிறகு ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனை நினைத்து, 'முருகா.. முருகா..' என்று மூன்று முறை கூறிக் கொண்டு சடலத்தின் மீது தடவினார். கணக்குப்பிள்ளையின் மகன், ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் எழுந்தார். அனைவரும் முருக பக்தரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஜமீன்தார் முருகபக்தரிடம், ‘உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள்’ என்றார். அதற்கு அவர், 'நான் வணங்கும் வாழை மர பாலசுப்பிரமணியரை சுற்றி, நான்கு கம்புகள் ஊன்றி மேற்கூரை போட்டுத் தாருங்கள்' என்று கேட்டார். அவரும் அவ்வாறே செய்து கொடுத்தார். வாழை மர பாலசுப்பிரமணியரின் சக்தியை அறிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பலரும், இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
கோவிலில் நடத்தப்படும் பூஜைகள்
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில், யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜையும், அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் நித்திய பூஜையும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூஜையும், வருடம் தோறும் வைகாசி விசாகத்தன்று சிறப்பு பூஜையும், பால்குட ஊர்வலமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த வாழை மர பாலசுப்பிரமணியரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். திருமண வரம், குழந்தை பாக்கியம் போன்றவை வந்து சேரும்.