வராக லட்சுமி நரசிம்மர் கோவில்
இரண்டு அவதார நிலைகளில் காட்சியளிக்கும் பெருமாள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில் உள்ள சிம்மாசலம் என்ற குன்றின் மீது வராக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக காட்சியளிக்கிறார். இது போல் எங்குமே அமைந்ததில்லை.
இக்கோயிலின் மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால்தான் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. இதற்காக சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்துகிறார்கள்.
இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக லட்சிமி நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. ஒவ்வொரு வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தனக் காப்பு விலக்கப்பட்டு வராக லட்சுமி நரசிம்மர் தன் நிஜ உருவத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் .
வராக லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதால் மன பயம் அகன்று மன தைரியம் வருகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. சகல பாவங்களும் தீர்ந்து புண்ணியங்கள் கிடைக்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள்.