பாமணி நாகநாத சுவாமி கோவில்
மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் காட்சியளிக்கும் அபூர்வத் தலம்
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று.
ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.
கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலம்
மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.