மும்பை மஹாலக்ஷ்மி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மும்பை மஹாலக்ஷ்மி கோவில்

சகல செல்வங்களையும் அருளும் மகாலட்சுமி

மும்பையின் மஹாலக்ஷ்மி பகுதியில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோவில். மும்பை மகாலட்சுமி கோவிலில் மகாகாளி, மகாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி ஆகிய மூன்று தேவியரும் எழுந்தருளி இருக்கின்றனர். முப்பெருந்தேவியரில் மஹாலக்ஷ்மி நடுநாயகமாக வீற்றிருக்கின்றாள். அதனால் இக்கோவில் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூன்று தேவியரும் கைகளில் தங்க வளையலும், தங்க மூக்குத்தியும், கழுத்தில் முத்து மணி மாலையும் அணிந்து காட்சி தருகிறார்கள்.

முற்காலத்தில் அன்னியர் படையில் இருந்து காப்பாற்றுவதற்காக, மூன்று தேவிகளின் சிலைகளை வொர்லி சிற்றோடைக்கு (Worli Creek) அருகில் கடலில் போட்டுவிட்டார்கள். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​கவர்னர் வில்லியம் ஹார்ன்பி (Governor Lord Horneby ) என்பவர் வொர்லி-மல்பார் ஹில் ஆகிய இரண்டு தீவுகளையும் இணைக்க முடிவு செய்தார். இந்தத் தீவுகளை இணைக்கும் பணி ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவுகளை இணைக்க இரு வழி சாலை திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடல் அலைகள் காரணமாக, அவர்கள் எழுப்பிய தடுப்பு சுவர் சரிந்து விழுந்து திட்டத்தை அவர்களால் முடிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி, ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபுவின் கனவில் தோன்றி, வோர்லி சிற்றோடையில் மூழ்கியுள்ள மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்து மலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார். அவற்றைக் கடலிலிருந்து வெளியே எடுத்து வந்து குன்றின் மேல் கோவில் கட்டி வைப்பதாக தேவியிடம் வாக்குக் கொடுத்தார்.

அதன்படி, வொர்லி சிற்றோடை மற்றும் மல்பார் மலை சிற்றோடையை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், வொர்லி சிற்றோடையிலிருந்து மூன்று தேவிகளின் சிலைகளையும் வெளியே எடுத்தனர். அதன் பிறகுதான் அவர்களால் இரண்டு சிற்றோடைகளையும் இணைக்க முடிந்தது. இந்த வேலை முடிந்ததும், பொறியாளர் ஸ்ரீ ராம்ஜி சிவ்ஜி பிரபு ஆங்கிலேய ஆட்சியாளரிடமிருந்து பரிசாக மலையின் மீது நிலத்தைப் பெற்றார். பின்னர் அவர் மலையின் உச்சியில் ரூ.80,000/- செலவில், 1761 A.D. - 1771 A.D க்கு இடைபட்ட காலத்தில், மகாலட்சுமி கோவிலைக் கட்டினார்.

Read More
 மும்பை சித்தி விநாயகர் கோவில்
விநாயகர், Vinayakar Alaya Thuligal விநாயகர், Vinayakar Alaya Thuligal

மும்பை சித்தி விநாயகர் கோவில்

நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்

மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.

இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.

இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.

சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

பிரார்த்தனை

குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Read More