மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.
இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்
காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.
மாயூரநாதர் கோவில்
காவிரி துலா ஸ்நானம்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய காலமாக சொல்கிறார்கள். இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால், இந்த நாட்களில் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்வது மிக புனிதமாகக் கருதப்படுகிறது.
புண்ணிய நதிகளானன கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால் தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான, மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஓவ்வொரு நாளும். ஒவ்வொரு நதியாக நீராடி தங்கள் பாவச்சுமைகளை நீக்கிப் புனிதம் பெறுலாம் என்று அருளினார். அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, வக்ஷ்மி, கெளரி, சப்தமாதர்கள் போனறோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். ஆகவே ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடைதாகும்.
இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வள்ளலார் கோயில். திருஇந்தளூர் பரிமளரெங்கநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களும் எழுந்தருளுகிறார்கள் . தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் முடிகிறது.
முடவன் முழுக்கு
ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் சிவபெருமானிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, 'கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும். ஸ்நானம் செய்' என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது.
காவிரி துலா ஸ்நான பலன்
இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன.
காவிரி துலா ஸ்நான காணொளிக் காட்சி
https://www.youtube.com/watch?v=Xov1u2MCxks
மாயூரநாதர் கோவில்
மயிலாடுதுறை அபயாம்பிகை
அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.
கௌரி தாண்டவம்
அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.
அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்
பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.
இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள். சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார்.
அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.
சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது. மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர். பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள் சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.
இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும் காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஆறாம் நாளன்று வெளியான பதிவு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
https://www.alayathuligal.com/blog/3nxzzk82pts7skpe7ekkc3b8gagw82
கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் திவ்யதேசம்
சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசம் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும்.அதனால் இத்தலத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பானதாகும்.
மாணிக்கவண்ணர் கோயில்
ரிஷப வாகனத்தில் விநாயகர்
மயிலாடுதுறை அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாழ்கொளிபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் ஆலயத்தில் காட்சி தரும் நடன விநாயகர், ரிஷப வாகனத்தில் இருக்கிறார். இது விநாயகரின் ஓர் அபூர்வமான காட்சியாகும்,
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தரும் வனதுர்கா பரமேஸ்வரி.
கதிராமங்கலம் தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வனதுர்கா பரமேஸ்வரி, முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம். சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே வனதுர்கா பரமேஸ்வரியை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வனதுர்கா பரமேஸ்வரிக்கு அர்ச்சனை செய்யும் போது அவளது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகின்றன.இது இன்றும் நடக்கும் அதிசயமான நிகழ்வாகும்.
துர்கையம்மன் கோயில்
துர்கையம்மனுக்கு தனி கோவில்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் துர்கையம்மனுக்கு என்று தனி கோவில் உள்ளது.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
தாமரைப்பூவில் தாள் பதித்த வண்ணம் காட்சி தரும் துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.ஆனால் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.