வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணியசுவாமி கோவில்
முருகனுக்கு வேலை நேர்த்திக்கடனாக செலுத்தும் திருப்புகழ் தலம்
கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள, வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் புகழிமலையின் மேல் அமைந்துள்ளது, பாலசுப்ரமணியசுவாமி கோவில். கோவிலுக்கு செல்ல 315 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான், இக்கோவில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோவில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கருவறையில்,பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக காட்சி நல்குகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோவிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது.
பிரார்த்தனை
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலத்து விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.