பாமணி நாகநாத சுவாமி கோவில்
சிவபெருமானுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படும் தேவாரத்தலம்
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி, திருப்பாதாளேஸ்வரர். இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர். பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு, நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.
இத்தலத்தில் இறைவனுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படுவதும் ஒரு தனிச் சிறப்பாகும். திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது நான்கு மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.
இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் 'ஓம்' என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் காட்சியளிக்கும் அபூர்வத் தலம்
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர் என்றாலும் அவருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று.
ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்தபோது தலம் எங்கும் சிவலிங்கமாய் தெரிந்ததால், கால் தரையில் படாமல் இறைவனை தொட்டு வணங்குவதற்காக இடுப்பிற்கு கீழே பாம்பு ரூபமாயும், மேலே மனித ரூபமாயும் இருந்து வணங்கினார். பாம்பு உருவாக்கிய லிங்கம் என்பதால், அது புற்றுவடிவாக அமைந்தது.
கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலம்
மனித முகம், பாம்பு உடலுடன் காட்சியளிக்கும் ஆதிசேஷனுக்கு, இத்தலத்தில் தனி சன்னதி இருப்பது சிறப்பாகும். அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.