பாபநாசம் ராமலிங்கசுவாமி கோவில்
108 சிவலிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் தலம்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ளது ராமலிங்கசுவாமி கோவில். இறைவன் திருநாமம் ராமலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி. ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமலிங்கர். அதனாலேயே, ராமேசுவரம் போல் இங்கேயும் ராமலிங்கர் என்கிற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். ராமபிரானின் பாவம் நீங்கப் பெற்றதால் இத்தலத்திற்கு 'பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேசுவரம் என்ற பெயரும் உண்டு.
பொதுவாக சிவன் கோவில்களில் கருவறையில் ஒரு சிவலிங்கத்தை நாம் தரிசிக்க முடியும். ஒரு சில சிவாலயங்களில், பிரகாரத்திலும் மேலும் சில சிவலிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில் மூலவர் ராமலிங்க சுவாமியின் வலப்புறம் உள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் மூன்று நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக 106 லிங்கங்கள் உள்ளன. இப்படி நீண்ட வரிசையில் அமைந்திருக்கும் சிவலிங்கங்களை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. 108 வது சிவலிங்கமான அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் 'ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேசுவரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னதி விமானம் காசி விசுவநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேசுவரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை
குடும்ப தோஷம், தொழிலில் தேக்கம், சுபகாரியத் தடைகள் உள்ளிட்ட கவலைகள் எதுவானாலும் அவற்றுக்கான பரிகாரமாக ஒரே வழிமுறை தான் இங்கு அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த ஆலயத்தை முழுமையாக 108 முறை வலம் வந்து வழிபடுவது தான்.
பாபநாசநாதர் கோவில்
பக்தனின் தாம்பூல எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மை
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நமச்சிவாயக் கவிராயர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
நமச்சிவாயக் கவிராயர் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீது பெரும் பக்தியும் பேரன்பும் செலுத்தி வந்தார். குறிப்பாக உலகம்மை மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.
இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாபநாசத் கோவிலுக்குச் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது உலகம்மை இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது, வாயிலிருந்து தெரித்து அம்பிகையின் ஆடையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான்.
அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். கவிராயரின் தாம்பூல எச்சிலைத் தான் அணியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறி மறைந்தாள்.விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் தங்கப் பூச்செண்டு ஒன்றை வைத்துப் தங்க கம்பிகளால் சுற்றிக் கட்டச் சொன்னான். மன்னன், நமச்சிவாயக் கவிராயரிடம், தாங்கள் அம்பிகைதாசர் என்பது உண்மையானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க நார்கள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான். அவரும் உலகம்மை அந்தாதி எனும் நூலை இயற்றிப் பாடினார். 'அபிராமி அந்தாதி'யைப் போல் இந்த நூலும் மிகுந்த சிறப்புடையது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.
'விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே'
எனும் பாடலை பாடி முடித்த சமயம் படபடவென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாய கவிராயர் கரத்திற்குத் தாவி வந்தது. மன்னன் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாய கவிராயர் பாதத்தில் விழுந்து வணங்கினர். மன்னன் அவருக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தான். இன்றும் அந்த தங்கப் பூச்செண்டை நாம் உலகம்மையின் கையில் காணலாம்.
இந்நிகழ்ச்சியின் காரணமாக நமச்சிவாயக் கவிராயரின் பெண் வழிச் சந்ததியினர் பாபநாசம் கோவிலுக்குச் சென்றால் அர்ச்சகர்கள் உலகம்மையின் கையிலிருக்கும் பூச்செண்டை எடுத்து அவர்களுக்கு தருவது வழக்கமாக இருந்தது.
மஞ்சள் பிரசாத மகிமை
உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.
கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
சர்ப்ப விநாயகர் கோயில்
சர்ப்ப விநாயகர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோவில்.இவருக்கு சர்ப்பம்,தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன.ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.