பழூர் விசுவநாத சுவாமி கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும், ஆயுதத்துடனும், யந்திர சக்தியுடனும் இருக்கும் அபூர்வக் காட்சி
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழூர் விசுவநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. மற்ற கோவில்களில் வட்ட வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கும் நிலையில், இக்கோவிலில் இறைவன் விசுவநாதர், சுயம்பு மூர்த்தியாக சதுர வடிவ ஆவுடையாரில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். அம்பிகை விசாலாட்சி இத்தலத்தில் கல்யாண கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவன், இறைவியை வணங்கிச் சென்றால், காசிக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள் பெரும் சிறப்பை பெற்றவை. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள், 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்த பீடத்தின் மேல் தங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்களில் சூரியன் உஷா-ப்ரத்யுஷாவுடனும், சந்திரன் ரோகிணியுடனும், செவ்வாய் சக்திதேவியுடனும், புதன் ஞானதேவியுடனும், குரு தாராதேவியுடனும், சுக்கிரன் சுகீர்த்தியுடனும், சனி நீலாதேவியுடனும், ராகு சிம்ஹியுடனும், கேது சித்திரலேகாவுடனும், காட்சியளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நவக்கிரகங்கள் தங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், யந்திர சக்திகளுடனும் எழுந்தருளியிருப்பதும் இங்கு மட்டும்தான். இத்தகைய நவக்கிரக அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக பரிகாரத் தலம்
இக்கோவில் ஒரு சிறந்த நவக்கிரக பரிகாரத் தலமாகும். அதனால் தான் இக்கோவில், நவக்கிரக கோவில் என்ற பெயரில் இப்பகுதியில் பிரசித்தம் பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஜாதக ரீதியில் நவக்கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து நவக்கிரக நாயகர்களை வணங்கி வழிபட வேண்டும். எள் விளக்கேற்றி வழிபாடு செய்வதுடன், நவக்கிரக நாயகர்களின் சன்னதியை 9 முறை வலம் வந்து, தேங்காய்- பழம் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
மேலும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத் தடைப் பாதிப்புள்ளவர்கள், குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோவில் நவக்கிரக நாயகர்கள் சன்னதிக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தோஷங்கள் நிவர்த்தியாகி உரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.