குறிச்சி அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில்
நவபாஷாணத்தால் ஆன, முப்பெருந்தேவியரும் இணைந்த அபூர்வ துர்க்கை அம்மன்
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கோவில். இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அம்மன் முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த வடிவமாகும். மேலும் அம்மனின் 12 அடி உயர திருவுருவானது நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்த அம்பிகைக்கு அஷ்டதசபுஜ (பதினெட்டுக் கை) மகாலட்சுமி துர்க்கை அம்மன் என திருநாமம் எழுந்தது.
அம்மன் திருமேனி உருவான வரலாறு
குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த தனராமலிங்கர் என்பவரிடம் அருகில் உள்ள பாலத்தளி கிராம மக்கள் துர்க்கை சிலை வடிவமைத்து கோயில் கட்ட ஆலோசனை கேட்டனர். அவர் கனவில் தோன்றிய துர்க்கை, சித்தர் ஒருவர் உன்னிடம் வருவார். அவரது ஆலோசனைப்படி சிலை செய்து வை என்று கூறினாள். அதன்படி ஓர் அமாவாசை நாளில் சித்தர் அவரிடம் வந்தார். நவபாஷாணத்தால் ஆன முப்பெருந்தேவியரும் இணைந்த 12 அடி உயர சிலை எழுந்தது. 18 கரங்களுடன் அமைந்த அந்த துர்க்காலக்ஷ்மி சிலையை ஒரே நாள் இரவில் வடித்தார். சிம்ம வாகனத்தில் அமர்ந்தது போல் அன்னை காட்சி தந்தாள். பின்னர் எதுவும் கூறாமல் தாம் கொல்லிமலை செல்வதாகக் கூறிச் சென்றார் சித்தர்.
பிரார்த்தனை
பதினெட்டுக்கை(அஷ்ட தசபுஜ) மகாலட்சுமி துர்க்கை அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்கும். தீராத நோய்கள் தீரவும், தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படவும், திருமணத்தடை நீங்கி குழந்தைச் செல்வம் கிட்டவும், வேலை கிடைக்க வேண்டியும், கணவன் மனைவி பிரச்னை நீங்கி நிம்மதி கிடைக்கவும் அம்பிகையிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர்.
நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.