நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்
தாயார் சொல் கேட்டு நடக்கும் பெருமாள்
கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கும் தாயார்
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசம் நாச்சியார் கோயில். பெருமாளின் திருநாமம் சீனிவாசப் பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி. இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் இக்கோவிலில் மிகவும் விசேஷமானது ஆகும். இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள்.
தாயார், இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, கோயில் நிர்வாகம் அனைத்தும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள்.
சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று வஞ்சுளாதேவியை தேடினர். மகாவிஷ்ணுவுடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைப் பற்றிக் கூறினார். உடனே மகாவிஷ்ணு அங்கு சென்று வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.