வாழைமர பாலசுப்பிரமணியர் கோவில்
பக்தனுக்காக வாழை மரத்தில் எழுந்தருளிய முருகன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் துலுக்கன்குறிச்சி என்ற இடத்தில் வாழைமர பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வாழை மரத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிப்பது விசேஷமானதாகும். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல விருட்சமாகவும் வாழைமரமே உள்ளது.
19–ம் நூற்றாண்டில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். முருகனை வணங்கிய பின்பே அன்றாட பணிகளை செய்யத் தொடங்குவார். அவர், தனது நிலத்தில் வாழை மரங்களை நட்டு வைத்து அதனை கண்ணும், கருத்துமாக பராமரித்து வந்தார். மேலும் அவர்,தன்னுடைய ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள முருகப்பெருமானை தினமும் வழிபட்டு வருவார். அந்த ஆலயம் வெம்பக்கோட்டை என்ற இடத்திற்கு அருகில் வனமூர்த்திலிங்கபுரம் என்ற ஊரில் இருந்தது.
ஒரு நாள் அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'பக்தனே! நீ தினமும் என்னைக் காண வெம்பக்கோட்டை வர வேண்டாம். நானே உன்னைத் தேடி வந்துவிட்டேன். நீ மிகவும் ஆசையாக பராமரிக்கும் வாழை மரங்களில், இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ, அந்த மரத்தில் நான் இருக்கிறேன்'என்று கூறி மறைந்தார். கனவில் இருந்து விழித்தெழுந்த முருக பக்தர், தன் மீது இறைவன் கொண்டிருக்கும் அன்பை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இந்த நிலையில் அந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள செவல்பட்டி ஜமீன்தாரின் கணக்குப் பிள்ளையின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வீட்டின் வாசலில் வைக்க குலை தள்ளிய வாழை மரம் தேவைப்பட்டது. பணியாட்கள் பல ஊர்களில் தேடியும் எங்குமே, குலை தள்ளிய வாழை மரம் கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில், முருக பக்தர் வேலாயுதம் வீட்டு தோட்டத்தில் குலை தள்ளிய வாழை மரம் இருப்பதை அறிந்து, அவரிடம் வந்து கேட்டனர்.
அதற்கு வேலாயுதம், 'இந்த மரத்தில் முருகன் குடியிருக்கிறார். அவரை நான் தினமும் வழிபட்டு வருகிறேன். எனவே என்னால் அந்த மரத்தை உங்களுக்கு தர முடியாது' என்று கூறி மறுத்தார்.
இதனை பணியாட்கள் ஜமீன்தாரிடமும், அவரது கணக்குப்பிள்ளையிடமும் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் கணக்குப்பிள்ளையின் மகனான மாப்பிள்ளை, 'நானே சென்று அந்த மரத்தை கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு, முருக பக்தரின் தோட்டத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வேலாயுதத்திடம் மரத்தை தரும்படி கேட்டார். வேலாயுதம் மீண்டும், 'இது மரமல்ல, நான் வணங்கும் தெய்வம். அதனால் இதனை வெட்டக்கூடாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டார்.
வாழைமரத்திலிருந்து பீறிட்ட ரத்தம்
வேலாயுதம் பேச்சைக் கேட்காமல், கணக்குப்பிள்ளையின் மகன் அரிவாளால், முருகப்பெருமான் குடியிருந்த வாழைமரத்தை வெட்டினார். மரத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மேலும் அந்த இடத்தில் நாகப்பாம்பு ஒன்று தோன்றி, கணக்குப்பிள்ளையின் மகனை தீண்டியது. ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் இந்தச் செய்தியை அறிந்து பதறித் துடித்து ஓடி வந்தனர். இறந்து கிடந்த தன் மகனைப் பார்த்து கணக்குப்பிள்ளை கண்ணீர் வடித்தார். 'மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய பிளளையை, பிணக்கோலத்தில் பார்க்கிறேனே' என்று கதறி அழுதார்.
கணக்குப்பிள்ளை மகன் உயிர்ப்பித்து எழுந்த அதிசயம்
பின்னர் கணக்குப்பிள்ளை தன் மகனை உயிர்ப்பித்து தரும்படி, வேலாயுதத்திடம் வேண்டினார். அதற்கு அவர் தன் கையில் எதுவும் இல்லை. முருகப்பெருமானின் கருணையால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூறினார். பிறகு ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனை நினைத்து, 'முருகா.. முருகா..' என்று மூன்று முறை கூறிக் கொண்டு சடலத்தின் மீது தடவினார். கணக்குப்பிள்ளையின் மகன், ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் எழுந்தார். அனைவரும் முருக பக்தரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஜமீன்தார் முருகபக்தரிடம், ‘உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள்’ என்றார். அதற்கு அவர், 'நான் வணங்கும் வாழை மர பாலசுப்பிரமணியரை சுற்றி, நான்கு கம்புகள் ஊன்றி மேற்கூரை போட்டுத் தாருங்கள்' என்று கேட்டார். அவரும் அவ்வாறே செய்து கொடுத்தார். வாழை மர பாலசுப்பிரமணியரின் சக்தியை அறிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பலரும், இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
கோவிலில் நடத்தப்படும் பூஜைகள்
மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில், யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜையும், அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் நித்திய பூஜையும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூஜையும், வருடம் தோறும் வைகாசி விசாகத்தன்று சிறப்பு பூஜையும், பால்குட ஊர்வலமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த வாழை மர பாலசுப்பிரமணியரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். திருமண வரம், குழந்தை பாக்கியம் போன்றவை வந்து சேரும்.