திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்
பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடிய பாலச்சந்திர விநாயகர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக, விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது.
பிரார்த்தனை
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.
எறும்பீசுவரர் கோவில்
தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தேவாரத் தலம்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர். இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி.
புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவன் எறும்பீஸ்வரர், வடக்கில் தலை சாய்ந்த நிலையில் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். அவர் 'தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப்(திருவெறும்பூர்) சிவபெருமானை வழிபடுவாயாக, அப்போது சூரனை அழிக்க ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்' என்று ஆலோசனை கூறினார்.
அதன்படி தான் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவன் விருப்பப்படி கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினையும் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் சிவபெருமான் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு அருள் வழங்கினார்.