திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில்
மயூர வாகன சேவன விழா
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பாம்பன் சுவாமிகள் கோவில். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள பாம்பன் என்ற ஊரில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு. சிறுவயது முதலே முருகப்பெருமானின் மீது தீவிர பக்திக் கொண்டிருந்தார். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகன் மேல் இயற்றிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666. இவர் தமிழ் உயிர் எழுத்துக்கள்(12), மெய்யெழுத்துக்கள்(18) எண்ணிக்கையை ஒன்றிணைத்து, இயற்றிய 30 பாடல்கள் கொண்ட 'சண்முகக்கவசம்', முருக பக்தர்களுக்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்றது.
இவர் வாழ்க்கையில் முருகன் புரிந்த திருவிளையாடல்கள் அநேகம். அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவர்கள் எலும்பு கூடாது என்று காலை அகற்ற நினைத்திருந்த தருணத்தில் முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்து குணப்படுத்தியது பெரிய அதிசய நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியை பற்றிய ஆதாரப்பூர்வமானபதிவுகளை, இன்றளவும் நாம் சென்னை பொது மருத்துவமனையில் (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பார்வையிடலாம்.
பாம்பன் சுவாமிகளுக்கு, அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்
சென்னை தம்புச் செட்டித் தெருவில், 27-12-1923 நாளன்று பாம்பன் சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால், அவரின் இடது கால் கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர், சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 11ம் எண்ணுள்ள மன்றோ வார்டில் சேர்ந்தார். சுவாமிகள் 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பு, புளி, காரம் அற்ற உணவையே உண்பவர் என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அதனால் அறுவை சிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டும் என்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். மருத்துவமனையில் சேர்ந்த 11ம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக விரித்து, அழகிய வானை மறைத்தும், அதன் இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலுடன் சேர்ந்து நடனமாடிய அழகிய காட்சியைச் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட் டியருளினான். மயில்களின் கால்கள், தரையில் பதியவில்லை. அவை பொன்மய பச்சை நிறமாக இருந்தன. முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் 'அசோகசாலவாசம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்:
அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்றொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் என்று நினைத்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் முருகப்பெருமான், ஒரு சிவந்த நிறக் குழந்தை வடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையிலேயே தானும் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான். அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள், குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று உணர்ந்ததும் முருகப்பெருமான் மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்,அவரது முறிந்த கால் எலும்பு கூடிவிட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர் இவரை சோதித்து, 'உணவில் உப்பை முற்றிலும் நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் வியப்பாக உள்ளது' என்று அன்புடன் கூறினார். இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்தார்.
முருகப்பெருமான் திருவருளால், 11ம் நாள் இரவு (6-1-1924) வளர்பிறைப் பிரதமை திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அவர் அடியார்கள், ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கு மயிலும், முருகப்பெருமானும் காட்சிக் கொடுத்த 100-வது ஆண்டு மயூர வாகன சேவன விழா, 10.1. 2024 முதல் 12.1.2024 வரை, மூன்று நாட்கள் திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோவிலில் கொண்டாடப்பட்டது..
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்
நாயன்மார்களால் பாடப்பட்ட தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.
பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.
கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள்.அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேட நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் ஆகியவற்றுடன் அம்மன் தோன்றும் போது, அக்காட்சியைக் காணும் கண்களே பாக்கியம் செய்தவை. இந்த அன்னையைப் பலரும் வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடைந்தார்கள்.
இந்தத் தலத்தில், இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி வழங்கி அருளினார். அவரைப் போன்றே யோகத்தில் ஆழ்ந்து சிவ மந்திரங்களை ஜபித்து, இறைவனிடத்தில் ஈடுபடும் அடியார்கள், பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று அகத்தியர் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் சிவயோகத்தின் இரகசியங்களை அன்னைக்கு இந்தத் தலத்தில் உபதேசம் செய்து வைத்தார். அதோடு, தானே எல்லா சுகங்களையும் துறந்து, தியாகம் செய்து தியாகராஜராக எழுந்தருளி, யோகமும் செய்து, இந்த யோகத்தின் மூலம் அடியார்கள் பெறக்கூடிய பரமானந்த நிலையைத் தான் அடைந்து, அன்னைக்குக் காண்பித்தார்.