திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்
திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.
சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.