
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா.
சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்
ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .
தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .
அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.
திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.
அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கபடுகிறது.
பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்
திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.