திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்
புதன் கிரகத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் திவ்யதேசம்
கும்பகோணத்தில் இருந்து (17கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். தாயார் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி. இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வைணவத் தலங்களில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர்.மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திவ்ய தேசமான திருப்புள்ளம்பூதங்குடி.
பரிகாரங்கள்
நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோவிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இக்கோவிலில் இருக்கும் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வல்வில்ராமன் கோயில்
சயன கோலத்தில் ராமர் காட்சி தரும் திவ்ய தேசம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள் - பறவை) என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு, சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.