சேஷபுரீஸ்வரர் கோவில்
ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.
ஆதிசேஷன் வழிபட்ட தலம்
கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
விஷம் தீண்டாப் பதி
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
ராகு கேது பரிகார தலம்
திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.
போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.