செஞ்சடையப்பர் கோவில்
உயிர் மீட்ட விநாயகர்
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்பனந்தாள். இங்கு வாழ்ந்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயனார். திடீரென ஒரு நாள், இவர் மகன் இறந்து விடவே அவனை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இத்தல விநாயகர் வழி மறித்து, அங்குள்ள நாககன்னித் தீர்த்தத்தில் நீராடி விட்டு மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அங்கு சென்றதும் இறந்த மகன் உயிர்த்தெழுந்தான். இவ்விநாயகர் இன்றும் 'உயிர் மீட்ட விநாயகர்' என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.
செஞ்சடையப்பர் கோவில்
பக்தையின் சங்கடத்தை தவிர்க்க தலை சாய்த்த சிவபெருமான்
கும்பகோணம் சென்னை சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பனந்தாள். இறைவன் திருநாமம் செஞ்சடையப்பர்.
அசுரகுல மகளான தாடகை என்பவள் சிறந்த சிவ பக்தை. தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வந்தாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது, அவளுடைய மேலாடை நழுவியது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி மூலம் தாடகையின் பக்தியை உலகறியச் செய்தார். இதனால் இத்தலத்திற்கு தாடகைஈச்சரம் என்ற பெயரும் ஏற்பட்டது.
தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு சிவலிங்கத்தை நேரே நிமிர்த்த முயற்சி செய்தார்கள். முடியவில்லை. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. செய்தி அறிந்த சோழ மன்னன், தன் யானை, குதிரைப் படையுடன் வந்து, சிவலிங்கத்தின் மேல் கயிற்றைக் கட்டி யானையைக் கொண்டு இழுக்கச் செய்தான். யார் இழுத்தாலும் சிவலிங்கம் நிமிரவில்லை.
63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் செய்தியை கேள்விப்பட்டு திருப்பணந்தாள் வந்தடைந்தார். சிவலிங்கத்தில் ஒரு மணிக் கயிற்றைக் கட்டி மறு நுனியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். இறைவனும் கலயனாருடைய தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தன் தலையை மேலே நிமிர்த்தினார். சாய்ந்த சிவலிங்கம் மறுபடியும் பழைய நிலையை அடைந்தது.
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும்.
சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது சிறப்பாகும். குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம் இதுவாகும்.